வாதநாராயணன் வாத நோய்களுக்கு சிறந்த மூலிகை
வாதநாராயணன் வாத நோய்களை குணப்படுத்தும் அற்புதமான மூலிகை. சிறு இலைகளையும் உச்சியில் பூக்களையும் தட்டையான காய்களையும் கொண்ட மரம் வகையை சார்ந்த இனமாகும்.
வாதரசு, ஆதிநாராயணன், வாதமடக்கி போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. தமிழகமெங்கும் வளரக்கூடியது.
வீக்கம் குறைய
வாதநாராயணன் இலையுடன் சிறிது செங்கல் தூள் அல்லது மணல் சேர்த்து வறுத்து துணியில் போட்டு கால் வீக்கம், தசை பிடிப்பு உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுக்க வீக்கம், பிடிப்பு ஆகியவை குணமாகும்.
உடல் வலி நீங்க
அதிக அலைச்சல் மற்றும் அதிக வேலை காரணமாக உடல் வலி ஏற்படுவதுண்டு இதற்கு வாதநாராயணன் இலையுடன் ஆடுதொடாபாளை இலையை தண்ணீரில் போட்டு கொதித்து சாறு இறங்கியவுடன் குளிக்க உடலி வலி நீங்கும்.
வாத நோய்கள் தீர
இதன் இலையை வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் 3 கிராம் அளவு நாள்தோறும் காலை வேளையில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வாத நோய்கள் தீரும்.
கழுத்து வலி, இடுப்பு வலி தீர
இதன் இலைச்சாறு ஒரு அவுன்ஸ் அளவு தினமும் ஒரு வேளை குடித்து வர வாதவீக்கம், இடுப்பு வலி, கழுத்து வலி ஆகியவை தீரும்.
பக்கவாதம், மூட்டு வீக்கத்திற்கு வாதநாராயணன் எண்ணெய்
- வாத நாராயணன் இலைச்சாறு -1 லிட்டர்
- மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு -1/4 லிட்டர்
- குப்பை மேனி சாறு -1/4 லிட்டர்
- கறுப்பு வெற்றிலை சாறு -1/4 லிட்டர்
- வேப்பெண்ணெய் -1/2 லிட்டர்
- விளக்கெண்ணெய் -1/2 லிட்டர்
- நல்லெண்ணெய் -1/2 லிட்டர்
- சுக்கு – 20 கிராம்
- மிளகு – 20 கிராம்
- திப்பிலி – 20 கிராம்
- சீரகம் – 20 கிராம்
- கருஞ்சீரகம் – 20 கிராம்
- மஞ்சள் – 20 கிராம்
- பசும்பால் – 1/2 லிட்டர்
செய்முறை
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், கருஞ்சீரகம், மஞ்சள் இவற்றை இடித்து பசும்பாலில் கலந்து வைத்துக்கொண்டு. வாதநாராயணன் இலைச்சாறு, மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பை மேனி, கறுப்பு வெற்றிலை சாறு ,வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றுடன் சேர்த்து காய்ச்சி கொதிநிலை வந்ததும் 21 வெள்ளருக்கம்பூவை நசுக்கி போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
பயன்கள்
வாத நோய்கள், மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகிவற்றுக்கு தேய்த்து மசாஜ் போல் செய்து வர உடனே குணமாகும்.