கரிசலாங்கண்ணி ( karisalankanni ) பயன்கள்
கரிசலாங்கண்ணி ஈரமான இடங்களில் தானே வளரக்கூடியது. வயல் வெளிகளில் வரப்புகளில் அதிகமாக காணப்படும். இதில் வெள்ளை , மஞ்சள் என இரண்டு வகை உள்ளது. சமைத்து சாப்பிடலாம்.
கண் பார்வை தெளிவு பெற
இதன் வேரை கொண்டு பல் துலக்கி வர உடல் ஆரோக்கியம் பெறும், முகம் வசீகரம் அடையும். மேலும் இதன் வேரை பசும் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர கண் பார்வை தெளிவு பெறும்.
இரத்த சோகைக்கு
கரிசலாங்கண்ணி கீரையை தக்காளி, வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து ரசமாக வைத்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர ரத்த சோகை குணமாகும், இது போன்று 3 வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
சளி, தும்மல், சைனஸ் பிரச்சனைகளுக்கு
ஒரு கைப்பிடி கரிசலாங்கண்ணி எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் சிறிது மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி ஒரு டம்ளர் அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வர சளி, தும்மல், சைனஸ் குணமாகும்.
காமாலை குணமாக
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, கீழாநெல்லி இலை இரண்டிலும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதில் மஞ்சள் தூள், 50கிராம் தயிர் சேர்த்து அதிகாலையில் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.
என்றும் இளமைக்கு
கரிசலாங்கண்ணி இலையுடன், தூதுவளை சேர்த்து சமைத்து சாப்பிட்டு தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தள்ளிப்போடலாம். என்றும் இளமையான தோற்றத்தை பெறலாம்.
நரம்புகள் பலமடைய
நரம்பு பலவீனமாக இருப்பவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்து அல்லது தூதுவளை சேர்த்து துவலையாக செய்து சாப்பிட்டு வர பலவீனமான நரம்புகள் பலமடையும்.
தலைமுடி கருமையாக
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை நன்றாக மை போல் அரைத்து வடை போல் தட்டி வெளியில் காய வைத்து பிறகு தேங்காய் எண்ணையில் போட்டு ஊறவைத்து அந்த எண்ணையை தலைக்கு வழக்கம் போல் தேய்த்து வந்தால் தலைமுடி நன்றாக வளரும், முடி கருமையாக மாறும்.
கருப்பை இறக்கம் குணமாக
மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அதே அளவு புளி எடுத்து அரைத்து 10 கிராம் அளவு தினமும் காலை, மாலை என இருவேளை 12 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை இறக்கம் குணமாகும்.
கல்லீரல், மண்ணீரல் நோய்கள் குணமாக
- கரிசலாங்கண்ணி இலை – 10
- வேப்பிலை – 5
- துளசி – 5
- கீழாநெல்லி – ஒரு கைப்பிடி அளவு
இவற்றை அரைத்து தினமும் இருவேளை சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், பித்தம், இரத்த சோகை ஆகியவை குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கு
வாரம் இருமுறையாவது இக்கீரையை சமைத்து சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம். நோய்களை தடுக்கும் மற்றும் குணமாக்கும் ஆற்றலை உடையது.
தலைமுடி செழித்து வளர கரிசலாங்கண்ணி தைலம்
- கரிசலாங்கண்ணிச் சாறு – 1 லிட்டர்
- நெல்லிக்காய்ச் சாறு – 1/2 லிட்டர்
- தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
தேங்காய் எண்ணையை சூடேற்றி அதில் கரிசலாங்கண்ணிச் சாறு, நெல்லிக்காய்ச் சாறு இரண்டையும் ஊற்றி காயவைத்து இறக்கி ஆற வைத்து பிறகு தலைக்கு தேய்த்து வர தலைமுடி செழித்து வளரும், இளநரை மாறும். தலைமுடி உதிர்வு பிரச்சனை தீரும். மேலும் உடல் குளிர்ச்சியடையும். கண் பார்வை தெளிவு பெறும்.