புதினா பயன்கள்
புதினா நல்ல மணமும் காரத்தன்மையும் கொண்டது. இது உணவுகளுக்கு மணமூட்ட பயன்படுத்தப்பட்டாலும் ஏராளமான மருத்துவ நன்மைகளை தரக்கூடியது. புதினாக்கீரை பசியை தூண்டும். வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல், ருசியின்மை ஆகியவற்றை நீக்குகிறது.
இதில் அதிகளவு வைட்டமின்களும் தாது பொருட்களும் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை பொடியாக செய்து பயன்படுத்தலாம். சட்னி அல்லது துவையலாக செய்து சாப்பிடலாம்.
புதியன் மூலி, பொதிரை ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.இது வயிற்றுக்கோளாறு மற்றும் இருமல் மருந்துகளிலும் வாய் கொப்பளிக்கும் தைலங்களிலும் சேர்க்கப்படுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்க
புதினா இலைச்சாற்றை எடுத்து வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
வயிற்றுவலி, வாயு நீங்க
இக்கீரையை நெய்விட்டு வதக்கி அதனுடன் மிளகாய், புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டுவர வயிற்றுவலி, வயிற்று பொருமல், செரியாமை மற்றும் வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் தீரும்.
உடல் பருமன் குறைய
அதிக எடை உள்ளவர்கள் புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும் மற்றும் தோல்நோய்களை நீக்கி உடலுக்கு பொலிவை தரும்.
காய்ச்சல் குணமாக
புதினாக்கீரை நிழலில் உலர்த்தி ஒரு கைப்பிடி அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு காயவைத்து 50மிலி விதம் இருவேளை குடிக்க காய்ச்சல் குணமாகும்.
பொடுகு மறைய
புதினாச்சாற்றுடன் பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவற்றை கலந்து நன்றாக முடியின் அடிப்பகுதியில் படும்படியாக தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வர பொடுகு தொல்லை தீரும்.கூந்தல் பளபளப்பாகும்.
புதினா பற்பொடி
இதன் இலையை வெளியில் நன்றாக காயவைத்து இடித்து சலித்து வைத்துக்கொண்டு அதில் 8-ல் ஒரு பங்கு உப்பு சேர்த்து வைத்துக்கொண்டு தினமும் பல் தேய்த்து வர பல் சம்பந்தமாக நோய்கள் நீங்கும். பல் நல்ல வெண்மையாக மாறும்.
புதினா டீ
உடல் சோர்வான நேரங்களில் புதினா டீ சாப்பிட உடலுக்கு சுறுசுறுப்பை தரும். மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரிசெய்கிறது.