வெற்றிலை மருத்துவ பயன்கள்
வெற்றிலை நம் தமிழர் விழாக்களிலும், பூஜைகளிலும், சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகையாகும். சிறுவர் முதல் பெரியவர் வரையிலும் பயன்படுத்தக்கூடிய மூலிகையாகும்.
உணவை எளிதில் செரிமானமாக்கும் என்பதால் நம் முன்னோர்கள் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கத்தை கடைபிடித்து வந்தார்கள்.
இலை இதய வடிவிலும், வெளிர் பச்சை நிறத்தில் காணப்படும் கொடி வகையை சார்ந்ததாகும். இது காரத்தன்மை கொண்டது. இதன் தாவரவியல் பெயர் Piper betle ஆங்கிலத்தில் betel leaf என்று அழைக்கப்படுகிறது.
வெற்றிலை வேறு பெயர்கள்
சப்த ஷீரா, திரையல், நாகினி, நாகவல்லி, தாம்பூலவல்லி, மெல்லிலை, மெல்லடகு, வெள்ளிலை, தாம்பூலம்
வெற்றிலை வகைகள்
வெள்ளை வெற்றிலை, கருப்பு வெற்றிலை, கற்பூர வெற்றிலை எனும் வகைகள் உள்ளன.
வெற்றிலையில் உள்ள சத்துக்கள்
இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, புரதச்சத்து, கரோட்டின், கால்சியம், கொழுப்பு, தயமின், நிக்கோடினிக் அமிலம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் மற்றும் விட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வெற்றிலை சாப்பிடும் முறை
வெற்றிலையின் காம்பு பகுதியையும், வால் போன்ற நுனி பகுதியையும், பின்புற நரம்பு பகுதியையும் நீக்கிய பிறகு பயன்படுத்தவும்.
வெற்றிலையின் மருத்துவ பயன்கள்
இதயம் பலப்படும், உடல் பருமன் குறையும், செரிமானம் அதிகரிக்கும், உமிழ் நீர் பெருகும், ஞாபக சக்தி அதிகரிக்கும், நரம்புகள் மற்றும் பற்கள் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பசி உண்டாக்கும், புத்துணர்ச்சி அளிக்கும், வயிற்றுக்கோளாறு விலகும், வாய் துர்நாற்றம் அகலும்.
மலச்சிக்கல் தீர
இரவில் வெற்றிலையை தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சொறி சிரங்கு குணமாக
5 வெற்றிலையை 100மிலி தேங்காய் எண்ணையில் போட்டு சூடாக்கி வடிகட்டி ஆறியவுடன் சொறி, சிரங்கு உள்ள இடத்தில தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
செரிமானம் அதிகரிக்க
செரிமான கோளாறினால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையுடன் சிறிது உப்பு, சிறிதளவு சீரகம் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட செரிமானம் அதிகரிக்கும்.
மூட்டுவலி குறைய
வெற்றிலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதில் சிறிது ஓமம் சேர்த்து சாப்பிட எலும்பு மற்றும் மூட்டு வலிகள் குறையும்.
முதுகு வலி குறைய
வெற்றிலைச்சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தேய்த்து வர முதுகு வலி குறையும்.
ஆஸ்துமா சளி, இருமல் குறைய
சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை சிறிதளவு எடுத்துக்கொண்டு பொடியாக்கி அதில் தேன் மற்றும் வெற்றிலைச்சாறு கலந்து சாப்பிட இருமல், சளி குணமாகும்.
நரம்புகள் பலம் பெற
இரண்டு தேக்கரண்டி வெற்றிலைச்சாறு, அரை தேக்கரண்டி தேன் இரண்டையும் தினமும் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும் .
உடல் எடை குறைய
வெறும் வயிற்றில் இரண்டு வெற்றிலையுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக மென்று சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
தொண்டைக்கட்டு
வெற்றிலைச்சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் பற்று போட தொண்டைக்கட்டு குணமாகும்.
தாய்ப்பால் சுரக்க
வெற்றிலையை விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கி மார்பில் வைத்து கட்ட தாய்ப்பால் சுரக்கும்.