கூந்தலை பராமரிக்க சிறந்த வழிமுறைகள்
கூந்தலுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்தவேண்டும். கடைகளில் கிடைக்கும் ரசாயன எண்ணெய்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
கூந்தல் பளபளப்பாக
சாதம் வடித்த கஞ்சியை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து லேசான ஷாம்பூ கொண்டு கழுவி வந்தால் தலைமுடி எண்ணெய் பசை, தலையில் உள்ள அழுக்குகள் நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
கூந்தல் பளபளப்புடன் இருக்க ஆலிவ் எண்ணையை நன்றாக தடவி மசாஜ் செய்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும். இப்படி வாரம் ஒருமுறை செய்யவேண்டும்.
இளநரை நீங்க
- வேம்பாளம் பட்டையை பொடி செய்து தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர இள நீங்கும்.
- நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி சாறு எடுத்து அதிமதுர பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வர நரை முடி நீங்கி முடி கருப்பாக மாறும்.
- கடுக்காய் நரை முடிக்கு சிறந்தது. கடுக்காய் பொடியை சுத்தி செய்து 2 முதல் 3 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் ஒரு வேளை சாப்பிட நரை முடி நீங்கும். உடல் உறுதி பெறும்.
நரை முடி கருப்பாக
கருவேப்பிலையை தினமும் 10 இலைகளை நன்றாக வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வரவும். மேலும் கருவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர நரைத்த முடி கருப்பாக மாறும்.
பொடுகு நீங்க
வேம்பம்பூ 50 கிராம் எடுத்து 100 மிலி சுத்தமான தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி ஆறவைத்து தலைக்கு தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
பேன் தொல்லை நீங்க
துளசி இலையை கழுவி அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அலசி வர பேன் தொல்லை தீரும்.
வசம்பை பொடியாக்கி தண்ணீர் சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து 10 – 20 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வர பேன் தொல்லை தீரும்.
முடி நன்றாக செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முடியின் மயிர் கால்களில் படும் வரை நன்றாக மசாஜ் செய்து குளித்து வர முடி நன்றாக செழித்து வளரும்.
கூந்தல் உதிர்வு
அதிமதுரத்தை நன்றாக காயவைத்து இடித்து பொடியாக்கி பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் உதிர்வது நின்று முடி நல்ல செழிப்பாக வளரும்.
தேங்காய் பாலை தலைக்கு தேய்த்து மஜாஜ் செய்து குளித்து வர முடி உதிர்வது குறைந்து முடி செழிப்பாக வளரும்.
கூந்தல் வறட்சி
கூந்தல் வறட்சிக்கு கற்றாழை சாற்றை தடவி 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து பிறகு அலசி வந்தால் கூந்தல் மிகவும் மென்மையாக மாறும்.
ஆலிவ் எண்ணையை லேசாக சூடுபடுத்தி தலையில் தேய்த்து குளிக்கலாம். இது போன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூந்தல் வறண்டு போவதை தடுக்கலாம்.
அதிக ரசாயன பொருட்களை தவிர்க்கவும்
கூந்தலுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் ஏராளமாக வந்து விட்டது. அதிக வாசனைக்காகவும் மற்றும் நுரை அதிகமாக வருவதற்கும் இராசயங்களை அதிகளவு பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. எனவே இவற்றை தவிர்த்து இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.