முருங்கைக்காய் இயற்கை ரசம்!
முருங்கைக்காய் இயற்கை ரசம் இது ஒரு அருமையான இயற்கை உணவு!முருங்கைக்காயின் பயன்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.ஆனால் அதைப் பச்சையாக உண்ணமுடியாது. காரணம் அது பச்சையாக உண்ணும உணவு அல்ல!
ஆனால் அதன் சத்துக்களோடு கண்டதைச் சேர்த்துக் கெடுக்காமல் இயற்கையாக அதே சமயம் சுவையாக உண்ணும ரசம் ஒன்றை நாங்கள் தயார் செய்து உண்டு வருகிறோம்.
முருங்கைக்காய் இயற்கை ரசம் செய்முறை:
வேண்டிய அளவு நறுக்கப்பட்ட முருங்கைக்காய்த் துண்டுகள்.
அது தவிர தக்காளி, சின்ன வெங்காயம், கொஞ்சமாகப் புளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு.
முதலில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் முருங்கைக் காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக வேகவைக்கவேண்டும்.
அதன் பின் வெளியே எடுத்து ஆறியபின்பு நன்றாகப் பிழிந்து சக்கையை எடுத்துவிட வேண்டும். எவ்வளவு ரசம் வேண்டுமோ அந்த அளவு அத்தோடு பச்சைத் தண்ணீர் விட்டுக் கலக்கவேண்டும். கொஞ்சம் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்.
அதில் நறுக்கிவைத்திருக்கும் தக்காளி, சின்னவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, ஆகியவற்றையும் நசுக்கிவைத்துள்ள சீரகம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றையும் தேவையான அளவு உப்பையும் போட்டுக் கலக்கிவிடவும்.
தேங்காய்த் துருவலையும் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுப்பில் வைக்காமல், தாளிக்காமல், ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் அருமையான முருங்கைக்காய்
இயற்கை ரசம் தயார்!
அப்படியே குடிக்கலாம்!
சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்!
அதுமட்டுமல்ல. முருங்கைக் காய்க்குப் பதிலாக பச்சையாக உண்ண முடியாத எந்தக் காய்களையும் பயன்படுத்தி இதே முறையில் இயற்கை ரசம் செய்து உண்ணலாம்!