வெந்தயம் மருத்துவ பயன்கள்

வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் மிக பயனுள்ளது. இதன் கீரையும், விதையும் மருத்துவ பயனுடையது. கிரேக்கர்களால் இந்தியாவில் அறிமுகமானது.
இந்திய மருத்துவத்தில் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதய நோய்களுக்கு பயன் தரக்கூடியது. மேலும் பேதி, பித்தம், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணமாக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும்.
வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்
இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், நீர்ச்சத்து, புரதசத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து, சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, தயாமின், நிகோடினிக் அமிலம் போன்றவைகளும் அடைங்கியுள்ளன.
மாதவிடாய் வலி குறைய
மாதவிடாய் வலியை நீக்க ஒரு சிறந்த பொருள் வெந்தயம். மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு வெந்தயத்தை பொடியாக்கி 5 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் வலி நீங்கும்.
வயிற்றுப்போக்கு குணமாக
10 கிராம் அளவு வெந்தயத்தை நெய் சேர்த்து வறுத்து அதில் சிறிது சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.
வாய் துர்நாற்றம் அகல
வெந்தயத்தை சுடுநீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர குடலில் ஜீரண சுரப்புகளை சீராக்கி வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
உடல் வலிமை பெற
கருணைக்கிழங்குடன் வெந்தயப்பொடியை சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க
பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயக்கஞ்சி வைத்து சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும்.அல்லது 5 கிராம் அளவு வெந்தயப்பொடியை தேன் கலந்து சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
ஆரம்ப நிலையில் உள்ள நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை 1/2 ஸ்பூன் அளவு சாப்பிட்டுட்டு வர நல்ல பலனை தரும்.
வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி நீங்க
இரவில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மோரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்பொருமல், வயிற்றுவலி நீங்கும். அல்லது வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும்
வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்து வர உடல் சூடு தணியும். முடி உதிர்வை நீக்கும். கண்களுக்கு குளிர்ச்சியை தரும். கண் பார்வை தெளிவு பெறும்.
முகப்பரு நீங்க
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகப்பரு நீங்கும்.முகம் பொலிவு பெறும்.
பொடுகு, பேன் நீங்க
வெந்தயத்தை பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பேன், பொடுகு நீங்கும்.
வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் ஊர வைத்து உடலில் தேய்த்து குளிக்க தோல் நோய்கள் நீங்கும். தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கும். தலையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
வெந்தயம் சாப்பிடும் முறை
- வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை பருகலாம்.
- வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
- வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்.