வெந்தயக்கீரை பயன்கள்
வெந்தயக்கீரை மற்ற கீரை வகைகளை போலவே சமைத்துண்ண நல்ல ருசியாகவும் அதிக சத்துக்களையும் கொண்டது. இது குளிர்ச்சியை தரும் தன்மைகொண்டதால் உடல் உஷ்ணத்தை போக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
பொருமல் மந்தம் வாயுகபம் போராடுகிற
இருமல் அருசியிவை ஏகுந்தரையில்
தீது லுயர்நமனைச் சீறும் விழியணங்கே
கோதில்வெந்த யக்கீரை கொள்
அகத்தியர் குணபாடம்
வெந்தயக்கீரை வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், வாயு, வறட்டு இருமல், சுவையின்மை, பசியின்மை, நெஞ்சுசளி ஆகியவற்றை குணமாக்கும். அதுபோன்ற அனைத்து பிரச்சினைகளையும் நீக்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என இப்பாடலின் பொருளாகும்.
உடல் சூடு தனிய
வெந்தயக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்துண்ண உடலுக்கு குளிர்ச்சியை தரும். சிறுநீரை பெருக்கும் தன்மைவாய்ந்தது. நீண்ட நேரம் கணினியில் வேலை செய்பவர்கள் இக்கீரையை சமைத்துண்ண கண் எரிச்சல் நீங்கும்.
வாய்ப்புண் குணமாக
வெந்தயக்கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு ஊறவைத்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பித்தம் குறைய
வெந்தயக்கீரையை சமைக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட பித்தம் தணியும்.
மலச்சிக்கல் நீங்க
ஒரு கைப்பிடி அளவு வெந்தயக்கீரையை வேகவைத்து கடைந்து அதில் சிறிது தேன் ஊற்றில் சாப்பிட மலச்சிக்கல் நீங்கும்.
வயிற்றுக்கோளாறு நீங்க
வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், வாயு போன்ற வயிற்றுக்கோளாறுகளை நீக்குகிறது. மேலும் பசியின்மை, ருசியின்மை ஆகியவற்றை குணமாக்கும்.
நீரிழிவு நோய்
இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். எனவே நோயை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
இதில் கால்சியம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் வாரம் இருமுறை அல்லது ஒருமுறையாவது சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த பலனை தரும்.