ரோஜா மருத்துவ பயன்கள்
ரோஜா தமிழகமெங்கும் வளரக்கூடிய செடியினம். நல்ல நறுமண மலர்களையும் கூறிய முற்களையும் கொண்டது. இதன் தாயகம் சீனா, அமெரிக்காவில் மஞ்சள் நிற ரோஜாப்பூக்கள் அதிகமாக பயிரிடப்படுகிறது.
வாசனை திரவியங்களிலும், அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படுவதால் மருந்துகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
வாய்ப்புண் குணமாக
ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். இக்குடிநீரை உடலில் உள்ள புண்களை கழுவி வந்தால் விரைவில் குணமாகும்.
பித்த நீர் வெளியேற
25 கிராம் ரோஜா இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு பால், சர்க்கரை சேர்த்து குடித்து வர வாதம், பித்த நீர் மலத்துடன் வெளியேறும். இதயத்துக்கு வலிமை தரக்கூடியது.
மலச்சிக்கல் தீர
10 இதழ் ரோஜாப்பூவுடன் கற்கண்டு சிறிதளவு கலந்து பிசைந்து தேன் சிறிது கலந்து ஒரு வாரத்திற்கு வெயிலில் காயவைத்து எடுக்க குல்கந்து ஆகும். இதனை காலை, மாலை சுண்டக்காய் அளவு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும். மேலும் இரத்த பேதி, பித்த நோய்கள் தீரும். நீடித்து சாப்பிட இதயம், கல்லீரல், குடல், சிறுநீரகம் முதலிய உறுப்புகள் பலமாகும்.
பருக்கள் மறைய
முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு ரோஜா பன்னீர் கொண்டு முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கி முகம் பளபளப்பாகும்.
வியர்வை நாற்றம் அகல
அதிகமாக வியர்பதினால் உடலில் சிலருக்கு துர்நாற்றம் ஏற்படும். இதற்கு குளிக்கும் நீரில் பன்னீரை கலந்து குளித்து வர வியர்வை நாற்றம் அகலும் உடலும் நல்ல புத்துணர்வு பெறும்.
மூலச்சூடு
ரோஜாப்பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணிந்து மலச்சிக்கல் தீரும்.