பூசணிக்காய் மருத்துவ பயன்கள்
பூசணிக்காய் தமிழகமெங்கும் பயிரிடக்கூடிய செடியினம் ஆகும். இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் பி, சி மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
இது உடல் வெப்பத்தை தணிக்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பூசணிக்காயில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் அதிகமாக விசேஷங்களில் திருஷ்டிக்காக உடைக்கப்படுகிறது.
இதய பலவீனம் நீங்க
பூசணிக்காய் சாறுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட இதய பலவீனம் நீங்கும். இரத்தம் சுத்தமாகும்.
உடல் சூடு தணியும்
பூசணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர் சுருக்கு, நீர் கட்டு போன்றவை குணமாகும்.
உடல் வலிமை பெற
பூசணி விதைகளை காயவைத்து பொடியாக்கி ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.
நச்சுக்களை வெளியேற்றும்
பூசணிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் வெப்பத்தினால் ஏற்படும் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
உடல் உள்ளுறுப்புகள் பலம் பெற
பூசணி சாற்றை குடித்துவர உடல் உள்ளுறுப்புகள் பலமடையும். உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் ரணங்களையும் ஆற்றும் தன்மையுடையது.
சிறுநீர் எரிச்சல் தீர
பூசணி சாற்றுடன் செம்பருத்திப்பூ சாறு சிறிது கலந்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட சிறுநீர் எரிச்சல் தீரும்.
புண்கள் விரைவில் ஆற
பூசணிக்காயை விதைகளை நீக்கி அதன் சதைகளை சிறிது சூடேற்றி புண்கள் மீது வைத்து கட்ட புண்கள் ஆறும்.
மலச்சிக்கல்
பூசணிக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வர மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் குடலில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுகிறது.
இரத்த அழுத்தம்
பூசணிக்காயில் பொட்டாசியம் சத்து உள்ளதால் இரத்த அழுத்தத்தை தடுக்கிறது. இதயம் கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
மாதவிடாய், வெள்ளைப்படுதல்
பூசணி விதைகளை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் வெள்ளைப்படுதல் குணமாகும்.