ஆமணக்கு மருத்துவ பயன்கள்
ஆமணக்கு இலை, விதை, எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவ குணமுடையது. இதன் இலை கட்டி, வீக்கம் போன்றவற்றை கரைக்க கூடியது. விதை சிறுநீர் அடைப்பு, வயிற்றுவலியை குணமாக்கும்.
வேர் வாத நோய்களை குணமாக்கும். எண்ணெய் மலச்சிக்கலை நீக்கும், உடல் சூட்டை தணிக்கும். இதை கிராமப்புறங்களில் கொட்டை முத்து என்று அழைப்பது வழக்கம்.
விளக்கெண்ணெய்
ஆமணக்கு விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. ஆமணக்கு எண்ணெய் வலி நிவாரணி தைலங்களாக பயன்படுத்தப்படுகிறது.
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி நீங்க விளக்கெண்ணையை தலையிலும் சிறிது தொப்புளிலும் தடவினால் உடல் குளிர்ச்சி பெறும், வயிற்றுவலி நீங்கும்.
பித்தம் தணிய
உடலில் பித்தம் அதிகரிக்கும் போது ஏற்படும் பித்தத்தை தணிக்க இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணையை உள்ளங்கால்களில் ஊற்றி தேய்த்துவிட்டு தூங்கினால் சூடு தணியும்.
மூட்டு வலி தீர
ஆமணக்கு இலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விளக்கெண்ணெய்யில் வதக்கி லேசான சூட்டுடன் வலியுள்ள மூட்டுகளில் ஓத்தடம் கொடுத்து வந்தால் மூட்டுவலி தீரும்.
மாதவிடாய் வலி நீங்க
விளக்கெண்ணையை அடிவயிற்றில் தடவி அதன் மேல் விளக்கெண்ணெயில் வதக்கிய ஆமணக்கு இலையை வைத்து கட்டி வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தாய்ப்பால் சுரக்க
ஆமணக்கு இலையை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்த வெந்நீரில் மார்பகங்களில் ஒத்தடம் கொடுத்து அதன் இலைகளை நெய் விட்டு வதக்கி மார்பகங்களில் வைத்து கட்ட பால் சுரப்பு அதிகரிக்கும்.
வாதம், பித்தம், கபம்
நல்லெண்ணெய் 40மிலி , விளக்கெண்ணெய் 60மிலி, நெய் 20மிலி ஆகிய மூன்றையும் எடுத்து தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்து வர வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும்.
உடல் மெலிய
ஆமணக்கு வேரை எடுத்து நன்றாக காயவைத்து இடித்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு அதில் சிறிது தேன் விட்டு இரவு ஊறவைத்து அதனை காலையில் வடிகட்டி குடித்து வர ஊளை சதை குறைத்து உடல் எடை குறையும்.
பித்த வெடிப்பு
விளக்கெண்ணையை சூடாக்கி அதில் மஞ்சள் பொடி சிறுது சேர்த்து வெடிப்புகளில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து கழுவி வர குணமாகும்.
கட்டிகள் குணமாக
ஆமணக்கு விதையை உடைத்து அதில் உள்ள பருப்பை எடுத்து அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டிகள் மீது வைத்து காட்டினால் கட்டிகள் பழுத்து உடைந்து குணமாகும். வயிற்றுவலி, வீக்கம் போன்றவை குணமாகும்.
உடல் பொன்னிறமாக
வெதுவெதுப்பான நீரில் 5 சொட்டு விளக்கெண்ணையை கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டு வர உடல் பொன்போல் ஜொலிக்கும். மேலும் வலிப்பு, கண், காது, மூக்கு,வாய் ஆகியவற்றில் உள்ள நோய்களும் குணமாகும்.
பெண்களுக்கு உண்டாகும் வெட்டை சூடு, மாதவிடாய் வலி, வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும்.
கண் நோய்களுக்கு
கண்களில் உண்டாகும் அரிப்பு, கண் சிவந்து காணப்படுதல் போன்ற கண் நோய்களுக்கு 2 துளி விளக்கெண்ணெய், 2 துளி தாய்ப்பால் இரண்டையும் கலந்து கண்களில் போட்டு வர உடனே குணமாகும்.