சடாமாஞ்சில் பயன்கள்
சடாமாஞ்சில் மூலிகை நல்ல மணம் வீசக்கூடிய மூலிகையாகும். குளியல் பொடியில் சேர்த்து குளித்து வர வியர்வை நாற்றம் அகலும். மேலும் உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும்.
முடி வளர்ச்சியை தூண்ட கூடிய முக்கிய மூலிகையாகும். இதனால் கூந்தல் தைலம் தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
கூந்தல் தைலம்
நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் எடுத்து அதில் 50 கிராம் சடாமாஞ்சில் போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வர முடி நன்றாக வளரும். நல்ல நறுமணம் வீசும்.
இரைப்பை பலம் பெற
சடாமாஞ்சில் சூரணத்தை 10 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வர ஈரலுக்கும், இரைப்பைக்கும் நல்ல பலத்தை கொடுக்கும்.
கண் பார்வை தெளிவு பெற
சடாமாஞ்சிலை கொத்தமல்லி சாற்றில் ஊறவைத்து வடிகட்டி கண்களில் 1 அல்லது 2 துளிகள் விட சிவந்த கண் மாறும். பார்வையும் தெளிவு பெறும்.
மாதவிடாய் பிரச்சினைகளுக்கு
அரை லிட்டர் தண்ணீரில் 50 கிராம் அளவு எடுத்து போட்டு நன்றாக கொதிக்க வைத்து 50மிலி வரும் வரை காய்ச்சி வடிகட்டி இரண்டு அவுன்ஸ் வீதம் தினமும் இருவேளை கொடுக்க உதிர சிக்கல் தீரும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீரும்.
நரம்பு தளர்ச்சி
சடாமாஞ்சிலை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் இருமுறை உடலுக்கு தேய்த்து குளித்து வர நரம்பு தளர்ச்சி நீங்கும்.
மேலும் தோல்களில் ஏற்படக்கூடிய அரிப்பு, வறட்சி, தடிப்பு தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் தீரும்.
மேலும் சித்த மருத்துவத்தில் இம்மூலிகையை இப்பாடலால் இதன் தன்மையை விளக்குகிறது.
குட்டஞ் சிலந்திவிடங் கோர புராணசுர
முட்டினங்கால் பேதிகண்ணே யொட்டிருமல்
பித்தமிரைப் பேகும் பெருங்கோரை யென் றுரைக்குஞ்
சுத்தசடா மாஞ்சிதனைச் சொல்
இதன் பொருள் இம்மூலிகையால் குஷ்ட நோய், உடல் சூடு, நீண்ட நாள் காய்ச்சல், கண் நோய், இரத்த பித்தம், சிலந்தி கடி விஷம், வாயு பேதி ஆகியவை நீங்கும் என்று பொருளாகும்.
இது சித்தமருத்துவத்தில் பல சூரணங்களிலும், தைலங்களிலும் சேர்க்கப்படுகிறது. மூலிகைகளில் இது முக்கியமான மூலிகையாகும்.