கண்டங்கத்திரி பயன்கள்
கண்டங்கத்திரி நீல நிற மலர்களையும் சிறிய கத்திரிக்காய் போன்ற காய்களையும் உடைய சிறிய செடியினம். இதன் இலை, பூ , காய், பழம், விதை, வேர், பட்டை என அனைத்தும் மருத்துவ பயனுடையது.
பல் வலி தீர
கண்டங்கத்தரி பழத்தை உலர்த்தி நெருப்பில் இட்டு ஆடாதொடை இலையில் வைத்து புகைபிடிக்க பல் கூச்சம், பல் வலி தீரும்.
ஆஸ்துமா, பீனிசம் குணமாக
- கண்டங்கத்திரி வேர் – 40 கிராம்
- ஆடாதோடை வேர் – 40 கிராம்
- அரிசி திப்பிலி – 5 கிராம்
இவற்றை 2 லிட்டர் தண்ணீரில் போட்டு 1/2 லிட்டராக காய்ச்சி 100 மிலி அளவு வீதம் தினமும் நான்கு வேளை குடிக்க ஆஸ்துமா, ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் ஆகியவை தீரும்.
வாத நோய்கள் தீர
கண்டங்கத்திரி இலைச்சாறு எடுத்து சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாத நோய்களுக்கு பூசி வர குணமாகும், மேலும் தலைவலிக்கு தேய்த்து வர தலைவலி குணமாகும்.
வறட்டு இருமலுக்கு
- கண்டங்கத்திரி வேர் – 30 கிராம்
- சுக்கு – 5 கிராம்
- சீரகம் – 5 கிராம்
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
இவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 லிட்டராக காய்ச்சி தினமும் 4, 5 முறை 100 மிலி வீதம் குடித்து வர வறட்டு இருமல் குணமாகும். மேலும் அனைத்துவித காய்ச்சல்களும் குணமாகும்.
வியர்வை நாற்றம் அகல
கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு உடலில் தேய்த்து குளித்து வர வியர்வை நாற்றம் அகலும்.
பித்த வெடிப்பு மறைய
இதன் இலைச்சாறுடன் ஆளி விதை எண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி பித்த வெடிப்புக்கு பூசி வர விரைவில் மறையம்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் தீர
உடல் சூடு காரணமாக சிறுநீர் பாதையில் நீர் கடுப்பு உண்டாகும். இதற்கு கண்டங்கத்திரி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட உடனே நீர்பாதையில் ஏற்படும் கடுப்பும் எரிச்சல் தீரும்.
மூட்டுவலி குணமாக
கண்டங்கத்திரி இலைச்சாறு, முடக்கத்தான் இலைச்சாறு, வாதநாராயணன் இலைச்சாறு ஒவ்வொன்றிலும் 100 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி இறக்கி பின்பு பச்சைக்கற்பூரம் தூள் – 50 கிராம் சேர்க்கவும்.
பிறகு மூட்டுவலிக்கு இந்த எண்ணெய லேசாக சூடு செய்து மூட்டுகளில் தேய்த்து வெந்நீரில் ஒத்தடம் கொடுக்க மூட்டு வலி காணாமல் போகும்.
கண் பார்வை தெளிவு பெற
கண்டங்கத்திரி பூ – 100 கிராம் எடுத்து காயவைத்து பிறகு திப்பிலி, சீரகம், நெல்லிமுள்ளி ஆகியவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும் . இது போன்ற 48 நாட்களுக்கு சாப்பிட்டு வரவும்.
சைனஸ் குறைபாடு நீங்க
கண்டங்கத்திரி வேர், சித்தரத்தை, சுக்கு, சோம்பு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் அளவு எடுத்து அதில் பால் விட்டு அரைத்து 1/4 லிட்டர் நல்லெண்ணையில் காய்ச்சி வைத்து கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வர தலைவலி, தும்மல், சைனஸ் ஆகியவை குணமாகும்.