நன்னாரி ( Nannari ) பயன்கள்
நன்னாரி பச்சை நிற இலைகளில் வெள்ளை நிற கோடுகளை உடைய ஒரு செடியினம். இதன் வேர்களை நல்ல நறுமணம் உடையது. அதிக மருத்துவ குணமுடையது.
வெயில்காலங்களில் நன்னாரி ஒரு வரப்பிரசாதம் இது உடலுக்கு குளிர்ச்சியுடையது. வெயில்காலங்ளில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது. இதில் பக்க விளைவுகள் என்பதே இல்லை எனலாம்.
இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் சாற்றில் நன்னாரி பானம் செய்யப்படுகிறது. இது இந்திய மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் பயன்படுபடுகிறது. இதன் வேர் நல்ல மணமுடையது இனிப்பு சுவை கொண்டது.
நன்னாரிவேரை தண்ணீரில் போட்டு வைத்தால் தண்ணீரை சுத்தப்படுத்தும். இந்த தண்ணீரை குடித்து வர இரத்தத்தை சுத்த படுத்தும். இது ஒரு மூலிகை கற்பமுறை ஆகும்.
வேறுபெயர்கள்
வாசனைக் கொடி, அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, கிருஷ்ணவல்லி, பாற்கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, நீருண்டி போன்றவை இதற்கு வேறு பெயர்களாகும், சுகந்தி என்றால் வாசனை என்று பொருள் உள்ளதால் இது நல்ல வாசனையை தருவதால் இப்பெயர் வரக்காரணம் ஆகும்.
குணம்
நன்னாரிவேர் சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப் படுகிறது. உடலில் உள்ள சூட்டை குறைக்க, சிறுநீர் கடுப்பு, தலைவலி, வாதநோய்கள், பித்தம், செரிமான கோளாறு, பால்வினை நோய்கள் ஆகியவற்றிக்கு சிறப்பாக செயல்படும்.
அதிக பித்தம் தீர
நன்னாரி வேரை நன்றாக உலர்த்தி பொடியாக்கி 2 கிராம் அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அதிக பித்தம் தீரும். இந்த பொடியை கற்றாழை சாறுடன் கலந்து சாப்பிட வண்டு கடி பாதிப்பு நீங்கும்.
நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்க
நன்னாரி சூரணத்தை 5 கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, மூலச்சூடு, வறட்டு இருமல் ஆகியவை தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக
நன்னாரி இலை, வேர் இரண்டையும் நன்றாக அலசி நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். மேலும் பித்தத்தையும் குறைக்கும்.
செரிமான கோளாறு நீங்க
நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அதில் சிறிது கருப்பட்டி கலந்து அந்த நீரை குடிக்க செரிமான கோளாறு நீங்கும்.
இரத்த அணுக்கள் அதிகரிக்க
நன்னாரி வேரை பொடியாக்கி 5 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள அணுக்களில் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
குடல் நோய்கள் குணமாக
நன்னாரி வேறை பொடியாக்கி சம அளவு கொத்தமல்லி தூளை சேர்த்து பாலில் கலந்து குடித்து வர பித்த நோய்கள், வயிறு, குடலில் உண்டாகும் நோய்கள் அனைத்தும் தீரும்.
புற்று நோய்க்கு
இது புற்றுநோய்க்கு எதிராக செயல் படும் தன்மை உள்ளது. ‘ஹெலிகோபாக்டர் பைலோரி’ பாக்டிரியாக்களை அழிக்கிறது. வயிற்றில் புண்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
நன்னாரி சூரணம்
நன்னாரிச்சூரணத்தை 1/2 கிராம் அளவு காலை, மாலை இருவேளை வெண்ணையில் குழைத்து சாப்பிட ஆரம்பகாலத்தில் உள்ள குஷ்ட நோய் தீரும். தேனில் கலந்து சாப்பிட காமாலை தீரும்.
நன்னாரி சர்பத்
வெயில் காலங்களில் சாப்பிட கூடிய ஒரு சிறந்த பானம் ‘நன்னாரி சர்பத்’ இது கோடைகாலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாப்பை தருகிறது.
நன்னாரி வேர் நீர் விட்டு காய்ச்சி அதில் பனைவெல்லம், எலுமிச்சை சாறு சேர்த்து தயாரிப்பதே சரியான முறையாகும்.