கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!

கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது.
மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.
சரி, இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
பொலிவான சருமம்
தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.
கரும்புள்ளிகள் மறைய
வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பிம்பிள் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழையை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்
சருமத்தின் கருமையை போக்கும்
வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.
முதுமை தோற்றத்தைத் தடுக்கும்
தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழையை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்